அதிமுக - பாஜக கூட்டணியில் அதிருப்தி தெரிவித்து அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில் மற்றொரு அதிமுக பிரபலமும் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பதாக அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பல ஊர்களிலும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே அதிமுக வாக்குகள் பெரும்பாலும் சரிந்தது பாஜகவுடனான கூட்டணியால்தான் என்ற கருத்து அதிமுகவினர் பலருக்குமே உள்ளது.
இந்நிலையில் தற்போது பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்ததை குறித்து அதிருப்தி தெரிவித்த அன்வர் ராஜா சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். அதை தொடர்ந்து தற்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
2012ம் ஆண்டு அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் போட்டியிட்டு வென்ற அவர் கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவியவர்.
திமுகவில் இணைந்த பிறகு பேசிய அவர் “அதிமுக மதவாத சக்திகளுக்கு துணைப்போகிறது. அதிமுகவின் போக்கு சரியில்லை. தமிழ்நாட்டில் மதவாத சக்திகளை வளரவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவே திமுகவில் இணைந்துள்ளேன்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K