அப்செட் ஆன ஓபிஎஸ்! ஓடோடி வந்த நயினார் நாகேந்திரன்!? - ஓபிஎஸ் எடுக்கப் போகும் அதிர்ச்சி முடிவு?

Prasanth K

செவ்வாய், 29 ஜூலை 2025 (11:00 IST)

தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்காத நிலையில், அவரை சமாதானப்படுத்த தமிழக பாஜக முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக NDA கூட்டணியிலிருந்து விலகியது. ஆனால் அப்போதும் பாஜகவுக்கு ஆதரவாக கூட்டணியில் தொடர்ந்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் சமீபத்தில் பாஜக - அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில் ஈபிஎஸ்க்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஓபிஎஸ்க்கு அளிக்கப்படுவதில்லை என்று பேச்சுகள் எழுந்துள்ளது.

 

சமீபத்தில் ஆடித்திருவாதிரை திருவிழாவிற்காக தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்த நிலையில் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் எடப்பாடியாரை மட்டும் பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். இது ஓபிஎஸ்ஸை ரொம்பவே அப்செட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

தனக்கென ஒரு கட்சி இருந்தால்தான் மரியாதை என்று உணர்ந்த ஓபிஎஸ் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காதது குறித்து கடுமையாக விமர்சித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாளை ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ்ஸின் இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை பாஜகவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது. பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி வழங்கப்படாதது குறித்து பேசிய நயினார் நாகேந்திரன் “பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்டார்களா என தெரியவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் நானே சந்திக்க ஏற்பாடு செய்து தந்திருப்பேன்” என கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய பாஜக முயன்று வருவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

ஆனால் நாளைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்து விலகும் அறிவிப்பையோ, அல்லது புதிய கட்சி தொடங்குவது பற்றியோ ஓபிஎஸ் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது விரைவில் மதுரையில் நடத்த இருக்கும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டமாகவும் அது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் நிலைபாடு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்