சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் கொலை சம்பவத்தை திரைப்படமாக எடுக்க இயக்குனர் பா.ரஞ்சித் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை எடுத்து வருபவர் இயக்குனர் பா. ரஞ்சித். அட்டகத்தி மூலம் கவனம் ஈர்த்தவர், அடுத்து ‘மெட்ராஸ்’ படம் மூலம் வட சென்னை மக்களின் வாழ்வில் அரசியல் எப்படி விளையாடுகிறது என்பதை தெளிவு படுத்தியிருந்தார்.
அதன்பின், ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய ‘கபாலி’ திரைப்படத்தில் மலேசிய தமிழர்களின் வாழ்க்கையை சித்தரித்திருந்தார். அப்படம் பல விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
பெண்கள் விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட கருத்தரங்குகளில் அவர் கலந்து கொண்டு பேசி வருகிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பெண்களின் மீதான தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளது. சுவாதி கொலை முதல் தூத்துக்குடி ஆசிரியை கொலை செய்யப்பட்டது வரை அனைத்தும் விவாதத்திற்குரிய விவகாரமாக மாறியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களுக்கு திரைப்படங்களும் ஒரு காரணம் என்பதை நான் மறுக்க மாட்டேன். நல்ல கருத்துகள் கொண்ட சினிமாக்கள் வந்தாலும், மோசமான படங்கள்தான் நிறைய வருகிறது.
என்னுடைய படங்களில் முடிந்த வரை சமூகத்திற்கு தேவையான, பெண்கள் விழிப்புணர்வுக்கு தேவையான மேலும் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை உரையாடல்களாக வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். இனி இயக்கும் படங்களிலும் அது தொடரும்.
சுவாதி கொலை வழக்கு குறித்து ஒரு முழுமையான திரைப்படமே எடுக்கலாம். அதில் ஏராளமான விவரங்கள் அடங்கியுள்ளது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சுவாதி வழக்கை ஒரு திரைப்படமாக எடுப்பேன்” என்று கூறினார்.