சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரான இயக்குனர் கவுதமன் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினை சேர்ந்த ஒருசிலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இதே போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் மீது மூன்று வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் நேற்று இயக்குனர் கவுதமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இன்று அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
பசுமை வழி சாலைக்கு எதிராக போராடிய மன்சூர் அலிகானை சமீபத்தில் போலீசார் கைது செய்த நிலையில் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்ததற்காக போலீசார் கவுதமனையும் கைது செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் கவுதமன் கூறியபோது, 'தமிழினத்தை அழிப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், தமிழினம் வாழ இளைஞர்கள் போராட வேண்டும் என்றும், 8 வழிச் சாலையை எதிர்ப்பதால் போலீசார் தன்னை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
8 வழிச் சாலையை எதிர்த்த பியூஷ் மனுஷ், மாணவி வளர்மதி, மன்சூர் அலிகான் வரிசையில் தற்போது கவுதமனும் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.,