சிபிஐ அதிகாரிகள் என கூறி கொள்ளை; திரைப்பட ஸ்டைலில் அரங்கேறிய சம்பவம்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (09:33 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் என கூறி கொள்ளையடித்த கும்பலை ஒரு வருடம் கழித்து போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திண்டுக்கலில் உள்ள டாஸ்மாக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் காளீஸ்வரன். இவரது மனைவி அங்கன்வாடி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் என்ற பெயரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் முறையாக கணக்கு காட்டாததாக கூறி பணம் நகைகளை கொண்டு சென்றனர். பிறகு அவர்கள் போலியான சிபிஐ அதிகாரிகள் என தெரிய வந்ததையடுத்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார் காளீஸ்வரன்.

இதுத்தொடர்பாக ஒரு வருடத்திற்கும் மேலாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து 5 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 100 பவுன் நகைகள், 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வாக்குமூலம் அளித்த குற்றவாளிகள் இவை அனைத்தும் காளீஸ்வரன் வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை கொண்டு வாங்கப்பட்டவை என கூறியுள்ளனர்.

ஆனால் காளீஸ்வரன் தனது வீட்டிலிருந்து 1 லட்சம் ரொக்கமும், 15 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் காளீஸ்வரனுக்கு ஏது இவ்வளவு சொத்து என்ற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்