ஜெ.வின் சிகிச்சை புகைப்படங்கள் என்னிடம் உள்ளன: வெளியிட மறுக்கும் தினகரன்!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (16:54 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் கூறியது. ஆனால் அவர் இறந்த பின்னரும் கூட அதனை வெளியிடவில்லை.


 
 
யாரையும் அவரை பார்க்க அனுமதிக்காமல் அவரது இறுதி நாட்கள் குறித்து எந்த தகவலும் இல்லாமல் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான வீடியோ, புகைப்படம் இருப்பதாக சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஜெய் ஆனந்த் தனது முகநூலில் கூறியிருந்தார்.
 
அதே நேரம் கர்நாடக மாநில அதிமுக செயலாளார் புகழேந்தியும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது அதிமுக துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை எந்த சூழலிலும் வெளியிடப்போவது இல்லை என கூறியுள்ளார்.
 
தி இந்து நாளிதழுக்கு தினகரன் அளித்த பேட்டியில் இதனை கூறியுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரை பார்க்க யாரையும் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.
 
ஜெயலலிதாவின் புகைப்படங்கள் சிலவற்றை சசிகலா என்னிடம் அளித்தார். அவரை மருத்துவமனை உடையில், பலவீனமான நிலையில் பார்க்கும்போது மிகவும் வேதனை ஏற்பட்டது. ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அந்த புகப்படங்கள் கிடைத்தன. ஆனால் அதனை எந்த சூழலிலும் வெளியிட மாட்டேன் என தினகரன் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்