ஆட்சியை கவிழ்க்க தினகரன் தரப்பு தீவிரம்: 38 எம்எல்ஏக்கள் இழுபறி!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (09:52 IST)
ஆட்சியை காப்பாற்ற, அதிமுக கட்சியை காப்பாற்ற, இரட்டை இலை சின்னத்தை மீட்க என பல காரணங்களை கூறி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தை அதிமுகவில் இருந்து முற்றிலுமாக நீக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து அமைச்சர்களும் முடிவெடுத்துள்ளனர்.


 
 
ஓபிஎஸ் அணியுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க தயாராகிவிட்டனர் அதிமுக அமைச்சர்கள். கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர்கள் தீவிர ஆலோசனை நடத்தி ஓபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும், சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கவும் முடிவெடுத்துள்ளனர்.
 
அமைச்சர்களின் இந்த அதிரடி முடிவால் தினகரன் தரப்பு பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளது. கட்சி இரண்டாக உடைந்தபோது ஆட்சியை காப்பாற்றியது நாங்கள் தான், தற்போது ஆட்சியை காப்பாற்ற எங்களை ஒதுக்கி வைப்பதா என கொந்தளிக்கிறார்கள் தினகரன் தரப்பினர். இதனால் இந்த ஆட்சியை கலைக்கவும் தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறது தினகரன் தரப்பு.
 
அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வரும் இந்த வேளையில் தினகரன் தரப்புக்கு, தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு, வெற்றிவேல் ஆகிய நான்கு எம்எல்ஏக்கள் இதுவரை வெளிப்படையாக தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள்.
 
இதுவரை தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் எம்எல்ஏக்கள் 38 பேர் உள்ளதாகவும் இவர்கள் உதவியுடன் இந்த ஆட்சியை கலைக்கவும் திட்டமிட்டுள்ளனர் தினகரன் தரப்பினர். ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும் 16 எம்எல்ஏக்கள் இருந்தால் போது தினகரனுக்கு ஆட்சியை கலைக்க.
அடுத்த கட்டுரையில்