இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் தான் ஜாமீனில் வெளியில் வந்தார். அவர் ஜாமீனில் வெளிவந்த பின்னர் அதிமுக வட்டாரத்தில் ஒருவித பதற்றம் நிலவுகிறது.
தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் கணவர் நடராஜன் அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் தினகரனுக்கு சில அறிவுரைகள் கூறியதாகவும், வெளியே வந்த பின்னர் சிறிது காலம் அடக்கி வாசிக்கவும் கூறியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அதிமுக கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருக்குமாறே அவர் கூறியதாக கூறப்படுகிறது. அவற்றை தினகரன் அமைதியாக கேட்டுள்ளார். அதன் பின்னர் அதிமுக அமைச்சர்களிடம் பேசிய நடராஜன் தினகரன் கட்சியில் தலையிடமாட்டார் ஒதுங்கியே இருப்பார் நான் பேசிவிட்டேன் என உறுதியளித்துள்ளார்.
ஆனால் ஜாமீனில் வெளிவந்த பின்னர் பேசிய தினகரன் நான் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளேன் என கூறி நடராஜனுக்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் அதிர்ச்சி அளித்தார். என்னை யாராலும் நீக்க முடியாது. பொதுச்செயலாளரால் மட்டுமே என்ன நீக்க முடியும். சசிகலாவை சந்தித்து பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அதிரடியாக.
தினகரனின் அதிரடியான இந்த பேட்டியை பார்க்கும் போது அவர் மீண்டும் அதிமுக விவகாரங்களில் தலையிட்டு தன்னை முதன்மைப்படுத்து வார் என பேசப்படுகிறது. நடராஜனின் பேச்சை தினகரன் துளியும் மதிக்கவில்லை என அமைச்சர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.