அதிமுகவில் சசிகலா குடும்ப சண்டை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் தற்போது சசிகலாவின் கணவர் நடராஜனுக்கும் டிடிவி தினகரனுக்கும் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரனுக்கும் திவாகரனுக்கு இடையே பிரச்சனை இருந்ததாகவும், தான் தான் இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறினார். மேலும் சசிகலாவும் இந்த விவகாரத்தில் இருவருக்கும் ஆலோசனைகள் வழங்கியதாக கூறினார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் செய்தியாளர் ஒருவர் நடராஜன் கூறியது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தினகரன், நடராஜன் ஒன்றும் அதிமுகவின் அதிகாராப்பூர்வ செய்தித்தொடர்பாளர் கிடையாது. என்னுடைய உறவினர் அவ்வளவு தான் என அதிமுகவுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி கூறினார்.
அதாவது நடராஜன் அதிமுகவை பற்றி கருத்து கூற தகுதியில்லாதவர். அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். மறுபடியும் சசிகலா தினகரனையும், வெங்கடேஷையும் தான் கட்சியில் சேர்த்தாரே தவிர நடராஜனை இன்னமும் அதிமுகவில் சேர்க்கவில்லை. அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் தினகரன் மறைமுகமாக கூறியுள்ளார். அதிமுகவை பற்றி பேச நடராஜன் அதிமுக காரர் கிடையாது என தினகரன் கூறியது மீண்டும் குடும்ப வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.