பழனிச்சாமி அண்ட் கோவின் அவைத்தலைவர் ஆளுநர்: தினகரன் காட்டம்!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (11:59 IST)
தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்தார். இதனால் தமிழக அரசியல் களம் மேலும் பரபரப்பாகி உள்ளது.


 
 
எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என தினகரன் ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்து கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஆளுநர் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
 
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில் அந்த 18 எம்எல்ஏக்களும் நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
 
இந்நிலையில் திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
 
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுத்தோம். ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் பொறுப்பை தட்டிக்கழித்துள்ளார். சரியான முடிவு எடுத்து அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஆனால் ஆளுநர் பழனிசாமி அண்ட் கோவின் அவைத் தலைவராகச் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது என தினகரன் குற்றம் சாட்டினார்.
அடுத்த கட்டுரையில்