உலகமே மெச்சும் இளையராஜாவை அவமதிப்பதா? - கொந்தளிக்கும் வைகோ

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (12:48 IST)
பெங்களூரு விமான நிலைய சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன் என்றும் இந்த முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 

 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நம் தாய்த் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ள மாமனிதர்களுள் ஒருவர்தான், தென் தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் தந்த இசைப் பேரரசர் இளையராஜா அவர்கள். தமிழ்த் திரைப்படங்களுக்கு அவர் அமைத்த இசை காலங்களைக் கடந்து ஒலிக்கும் பெருமைக்குரியது.
 
ஆசியக் கண்டத்தில் ஒரு ஜப்பானியனோ, சீனாக்காரனோ, கொரியாக்காரனோ சாதிக்க முடியாததை, சிம்பொனி இசை அமைத்து, அகிலத்தின் பல்வேறு இசை மேதைகளால் பாராட்டப்பட்டவர். அவர் சிறந்த கவிஞரும் கூட.
 
அவரும், அவரது குடும்பத்தினரும் ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு, பிரசாதப் பொருட்களுடன் சென்னை பயணிக்க பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள், கோவில் பிரசாதப் பொருட்களை அனுமதிக்காததுடன், இளையராஜா அவர்களின் விளக்கத்தையும் ஏற்காமல் ஒரு மணி நேரம் காக்க வைத்துள்ளனர். 
 
அடக்க உணர்ச்சியும், உயர் பண்பு நலன்களும் கொண்ட இளையராஜா அவர்கள் சிம்பொனி இசையால் உலகமே மெச்சியபோது, இந்திய அரசுத் தொலைக்காட்சி, அந்தச் செய்திகளை இருட்டடிப்புச் செய்தது. ஒரு சாதனைத் தமிழனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று நாடாளுமன்றத்தில் குமுறலோடு உணர்வுகளைப் பதிவு செய்தவன் என்ற வகையில், பெங்களூரு விமான நிலைய சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன். 
 
இந்த முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்