சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா தனது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு தனது கணவர் நடராஜன் மீது பாசம்லாம் ஒன்னும் இல்லை, அவர் வந்தது அரசியல் காய்களை நகர்த்த தான் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
இரட்டையிலை சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தீபா தாக்கல் செய்திருந்த மனுவை திரும்ப பெற்றுவிட்டதாக செய்திகள் வந்ததையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தீபா, தான் எந்த மனுவையும் திரும்ப பெறவில்லை, அது வதந்தி என மறுத்தார். மேலும் வரும் 13-ஆம் தேதி பல பிரமான பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், சசிகலாவிற்கு தன்னுடைய கணவர் நடராஜன் மீதான பாசம் என்பதெல்லாம் நாடகம், அவர் மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கு ஒரு உதாரணம். மருத்துவமனையில் இருந்த என்னுடைய அத்தையை பார்க்க அனுமதி கொடுக்காமல் நடுரோட்டில் நிற்க வைத்தார்.
தற்போது உள்ள அரசியல் சூழலில் காய்கள் நகர்த்துவதற்காகவே அவர் சிறையில் இருந்து பரோலில் வந்திருக்கிறார் என தீபா கூறியுள்ளார். மேலும் தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைத்துள்ள விசாரணை ஆணையத்தால் எந்த உண்மையை கொண்டு வர முடியாது. நான் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு குரல் கொடுப்பேன் என்றார்.