வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதை பார்ப்போம்.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென்கிழக்கு சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
எனவே, இலங்கை மற்றும் நாகப்பட்டினம் இடையே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏதாவது ஒரு பகுதியில் கரையை கடக்கும் என்றும், சரியான கரையை கடக்கும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல் விரைவில் கணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.