அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

Mahendran

வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (10:23 IST)
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு, இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் கடந்த 22 மாதங்களில் 300 லிட்டருக்கும் அதிகமான தாய்ப்பாலை தானமாக வழங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 
 
திருச்சியை சேர்ந்த 34 வயது செல்வ பிருந்தா  என்ற இரண்டு குழந்தைகளின் தாய், கடந்த 22 மாதங்களாக தொடர்ந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இதுவரை அவர் 300.17 லிட்டர் தாய்ப்பாலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார். அவரது இந்தச் சேவை, 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.
 
மருத்துவமனை நிர்வாகத்தின் கூற்றுப்படி, கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மருத்துவமனைக்கு கிடைத்த மொத்த தாய்ப்பாலில், பிருந்தாவின் பங்களிப்பு கிட்டத்தட்ட பாதி அளவுக்கு இருந்துள்ளது. இது அவருடைய அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
 
இது குறித்து செல்வ பிருந்தா கூறுகையில், "சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் காரணமாகப் பல தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்யத் தயங்குகிறார்கள். தானம் செய்வதன் மூலம் உடல் எடை குறையும் என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது. ஆனால், மருத்துவரின் விளக்கத்திற்கு பிறகு, மன உறுதியுடன் தொடர்ந்து தானம் செய்து வருகிறேன். என் மூலம் பல குழந்தைகளின் பசியைப் போக்க முடிவது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது" என்று கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்