அரபிக் கடலில் மே 22ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது மேல் சுழற்சி அமைப்பின் தாக்கமாக ஏற்பட்டதாகவும், அதே பகுதியிலேயே புயல்சின்னமாக வலுப்பெற்று, வடக்கே நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இதேபோல் மழைக்கால சூழ்நிலை காணப்படும்.
மே 19ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். அதேபோல், மே 20ம் தேதி வேலூர், சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
நேற்று ஓகேனக்கலில் 120 மிமீ மழை பதிவாகியுள்ளது. கரூர் மாவட்ட பஞ்சப்பட்டியில் 100 மிமீ, நாமக்கலின் புதுச்சத்திரம், திருப்பத்தூரின் வாணியம்பாடியில் 90 மிமீ, பந்தலூரில் 80 மிமீ மழை பெய்தது.