வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

Siva

ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (08:51 IST)
வங்கக் கடலில் உருவான புயல் வலுவிழந்ததை அடுத்து, புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தளர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிவிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால், புயல் தொடர்பான எந்த ஆபத்தும் தமிழகத்திற்கு இல்லை என்றும், மிகப்பெரிய அளவில் கன மழை பெய்ய வாய்ப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். 
 
குறிப்பாக, இன்று காலை 10 மணி வரை ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்