கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்" நகரும் வேகம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் பல சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் புயலின் வேகம் அதிகரித்து, மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் தற்போது நகர்ந்து வருவதாகவும், இதுவரை ஏழு கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பல கடைகள் அடைக்கப்பட்டு, தெருக்கள் வெறிச்சோடி உள்ளது. போக்குவரத்து மிகவும் குறைந்த அளவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புயல் மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகளுக்கும் இன்று விடுமுறை என சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்றும், கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பயணிகள் அதை பயன்படுத்த வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், மாநகர பேருந்துகளும் வழக்கம் போல இயங்கி வருகின்றன. அவசர தேவைக்கு மட்டும் வெளியூர் செல்ல மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.