தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய கூடாது: விசிக தலைவர் திருமாவளவன்

Siva

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (11:56 IST)
தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதற்கு எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளார். இது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
 
பணி நிரந்தரம் என்ற கோரிக்கை, "குப்பையை அள்ளுபவன் குப்பையை நிரந்தரமாக அள்ளட்டும்" என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்று திருமாவளவன் கூறினார். “தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் சொன்னால், அந்தக் குப்பை அள்ளும் தொழிலையே நிரந்தரப்படுத்தி, அதை நீங்கள் காலம் முழுவதும் செய்ய வேண்டும் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் விளக்கினார்.
 
“அந்தத் தொழிலிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்” என்று குறிப்பிட்ட அவர், “எனவேதான், தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டாம் என்பதே எங்களது நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார். திருமாவளவனின் இந்த கருத்து, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சில அமைப்புகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்