’ரூ.570 கோடி விவகாரத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல்கள்’ - கருணாநிதி

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (05:33 IST)
கோவையிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரூ.570 கோடி பணப் பரிவர்த்தனை சம்மந்தமாக சி.பி.ஐ.யின், லஞ்சப் புலனாய்வு பிரிவு சில அதிர்ச்சி தரத்தக்க கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திருப்பூர் மாவட்டத்தில் 13-5-2016ல் கண்டு பிடிக்கப்பட்ட 3 கண்டெய்னர்கள் பற்றியும், அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று, வழக்கறிஞர் வில்சன் திறமையாக வாதாடி, நீதியரசர்கள் சி.பி.ஐ. விசாரணை நடத்தி எவ்வளவு விரைவாக அறிக்கை கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவில் நீதி மன்றத்திற்கு அறிக்கை தர வேண்டுமென்று உத்தரவிட்டதைப் பற்றியும், எந்தெந்த சந்தேகங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பது பற்றியும் 2 நாட்களுக்கு முன்பு தான் மிக விளக்கமாக 2 பக்கங்களுக்கு நான் விரிவாக பல்வேறு தகவல்களைத் தந்திருந்தேன்.  
 
நம்முடைய சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையில், இன்றைய நாளேடு ஒன்றின் ஆங்கில இணைப்பில், தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு மே மாதம் நடைபெற்ற தேர்தல் நேரத்தில் கோவையிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரூ.570 கோடி பணப் பரிவர்த்தனை சம்மந்தமாக சி.பி.ஐ.யின், லஞ்சப் புலனாய்வு பிரிவு சில அதிர்ச்சி தரத்தக்க கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.
 
பணம் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரிகளில் பொய் பதிவெண் பலகைகள் இருந்தன என்றும், அந்தப் பதிவெண்கள் அனைத்தும் ஆந்திர மாநிலத்தின் மோட்டார் பைக்  பதிவெண்கள் என்றும், புது டெல்லி சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மேலும், தமிழகத்திலிருந்து நடைபெற்ற பணப் பரிவர்த்தனை நன்கு திட்டமிடப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான பண நகர்வாகும் என்றும், சி.பி.ஐ. தொடக்க நிலை புலனாய்வு செய்திருப்பதாகவும், அதன் மூலம் இந்த முரண்பாடுகள் தெரிய வந்துள்ளன என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
 
AP 13 X 5204, AP 13 X 8650 AP 13 X 5203 என்ற பதிவெண்கள் கொண்ட  கண்டெய்னர் லாரிகள் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த போக்குவரத்து முகவரால் வழங்கப்பட்டவையாகும் என்று வெளியிடப்பட்டுள்ளது.  
 
மேலும் அதில் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு : திருப்பூருக்கு அருகே 3 கண்டெய்னர் லாரிகளையும் சோதனைக்காகத் தடுத்து நிறுத்திய குழுவினர் திருப்பூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் உள்ள குழுவின ராவர். இதிலிருந்து திருப்பூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளருக்கு பணப் பரிவர்த்தனை குறித்து எந்தத் தகவலும் அனுப்பப்படவில்லை என்பது உறுதியாகிறது.
 
ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணப் பரிவர்த்தனையின் போது எந்த வழியாக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதோ, அந்த வழியில் உள்ள அனைத்து மாவட்டங்களின் காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும் பணப் பரிவர்த்தனை குறித்து தகவல் அனுப்பப்பட வேண்டும்.
 
பணப் பரிவர்த்தனையின் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பணம் முழுவதும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமானதா? என்பது தான் மிகப் பெரிய கேள்வியாகும். பின்னாளில்  புலனாய்வைத் தடுத்து திசை திருப்பிடும் நோக்கில், பணப் பரிவர்த்தனையின் போது எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மோசடியாக உருவாக்கப்பட்டவையாகும்.
 
முன் தேதியிட்டு ஆவணங்களை உருவாக்குவதற்கு பணப் பரிவர்த்தனையின் பின்னணியில் இருந்தவர்கள் முயற்சித்தாலும், புலனாய்வுக்கு உதவக் கூடிய தேவையான தடயங்கள் கிடைக்கும்.  பணப் பரிவர்த்தனையில் சட்டத்திற்குப் புறம்பானவை ஏதும் இருந்தால், அவை நிச்சயமாக வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
 
பணப் பரிவர்த்தனை நேர்மையானதும், உண்மையானதும் தானா?  பணப் பரிவர்த்தனையை அவ்வளவு ரகசியமாக மேற்கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு ஏன் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை? வாகனங்களுக்கு ஏன் பொய்யான பதிவெண் பலகைகள் பயன்படுத்தப்பட்டன? என்ற கேள்விகளுக்கு விடைகள் தேவைப்படுகின்றன. 
 
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பண உரிமை கோருவதற்கு, 24 மணி நேரம் ஆகியிருக்கிறதே என்பது மிகப் பெரிய புதிராகும். 24 மணி நேரத்தில் பணத்திற்கான உரிமையைக் கோருவதற்கு யாரும் முன் வரவில்லை என்பதை திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்திருக்கிறது. இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.
 
ஏனெனில் கண்டெய்னர் லாரிகளில் சென்றவர்கள், லாரிகள் பிடிபட்டவுடன், வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் அளித்திருக்கக்கூடும். அது மாதிரி யாரும் தகவல் அளிக்க வில்லை என்று நம்புவதற்கு இடம் இருக்கிறது. கண்டெய்னர் லாரிகளுடன் சென்றவர்களின் செல்போன் பதிவுகளைப் பார்த்து, லாரிகள் பிடிபடுவதற்கு முன்பும் பின்பும் எந்தெந்த தொலைபேசிகளை அவர்கள் தொடர்பு கொண்டார் கள் என்பதை சி.பி.ஐ. அறிந்து கொள்ள முயற்சிக்கும். 
 
இத்தனை செய்திகளும் சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள் சந்தேகங்கள். சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருசில நேர்மையாளர்கள் வெளியிட்ட முதல் நிலை தகவல்கள் தான் இவை.  இன்னும் சிலரை திசை மாற்ற தவறு செய்தோர் முயன்றிடக் கூடும். இதைத் தான் 17ம் தேதி விரிவாக குறிப்பிட்டிருந்தேன். நான் குறிப்பிட்ட சந்தேகங்கள் ஒவ்வொன்றும் உறுதி செய்யப்பட்டு, சிறிது சிறிதாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
 
விரைவான குறுக்கீடற்ற விசாரணை முழுமை அடைந்து அனைத்துச் சந்தேகங்களும் உறுதி செய்யப்படும் போது, எழுப்பப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் சட்ட ரீதியான விடைகள் கிடைத்து, சம்மந்தப்பட்டவர்களை நடவடிக்கைக்கு உட்படுத்தும் என்பதில் நாடு உறுதியாக இருக்கிறது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்