மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளை சமர்பிக்க வேண்டும் என அப்போலோ நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
ஜெயலலிதாவின் மகள் தான் எனவும், இது தொடர்பாக டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்த ஜெ.வின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரின் சகோதரர் தீபக் ஆகியோர் “ ஜெ.விற்கு மகள் என யாரும் இல்லை. அவரின் சொத்தை குறிவைத்தே அம்ருதா வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெ.விற்கு சைலஜா என்ற சகோதரியே கிடையாது. எங்களை தவிர எங்கள் பாட்டி சந்தியாவிற்கு யாரும் வாரிசு இல்லை” என பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.வின் ரத்த மாதிரிகள் அப்போலோ மருத்துவமனையில் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வருகிற மார்ச் 7ம் தேதிக்குள் ஜெ.வின் ரத்த மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அப்படி சமர்பிக்கும் பட்சத்தில், அம்ருதாவின் ரத்த மாதிரிகளோடு ஒப்பிட்டு, டி.என்.ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.