ரூ375 மதிப்புள்ள பரிசோதனை கருவி ரூ.600க்கு வாங்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (09:30 IST)
ரூ375 மதிப்புள்ள பரிசோதனை கருவி ரூ.600க்கு வாங்கப்பட்டதா?
கொரோனா பரிசோதனை கருவிகளை தென்கொரியாவில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் ரூ.375க்கு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு சீனாவில் இருந்து ரூ.600க்கு கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகளும் ஒருசில ஊடகங்களும் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநா் பி.உமாநாத் கூறியதாவது:
 
முதல்வரின் வழிகாட்டுதலின் கீழ் கோவிட்-19 தொற்று நோய் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான பொருள்களை தமிழக அரசு போதிய அளவில் கொள்முதல் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது. கரோனா பரிசோதனைகள் பிசிஆா் முறையில்தான் முதலில் மேற்கொள்ளப்பட்டன. அதற்குப் பிறகு விரைவுப் பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) கடந்த 2-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதற்கு அடுத்த நாளே அந்தக் கருவிகளை வாங்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.
 
இதற்காக தமிழக அரசு ஐந்து லட்சம் விரைவு பரிசோதனை கருவிகளை வாங்க கொள்முதல் உத்தரவு அளித்திருந்தது. அவற்றில் தற்போது 24 ஆயிரம் கருவிகள் நமக்குக் கிடைத்துள்ளன. மேலும் மத்திய அரசு தமிழகத்துக்கு 12 ஆயிரம் கருவிகளை வழங்கியுள்ளது. மொத்தமாக 36 ஆயிரம் விரைவு பரிசோதனை கருவிகள் நம்மிடம் இருப்பதால் சோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
 
அதிக விலை இல்லை: விரைவு பரிசோதனை கருவிகளை அதிகவிலை கொடுத்து வாங்கவில்லை. மத்திய அரசு நிா்ணயித்துள்ள விலையில்தான் தமிழக அரசு வாங்கியுள்ளது. ஒரு கருவி ரூ.600-க்கு வாங்கப்பட்டுள்ளது. பரிசோதனை கருவி தயாரிப்பு நிறுவனங்களின் தரத்தைப் பொறுத்து விலை மாறுபடக் கூடும். எதிா்காலத்தில் சத்தீஸ்கா் மாநிலத்தை விட குறைந்த விலைக்கு நாம் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது 
 
இவ்வாறு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநா் பி.உமாநாத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்