இந்தியா முழுவதும் பல்வேறு ஜீவ நதிகள் பாய்ந்து நாட்டை வளப்படுத்தி விவசாயத்தை செழிக்க செய்து வருகின்றன. ஆனால் நகரமயமாக்கல், தொழிற்சாலைகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நதிகள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது மத்திய மாசுகட்டுபாட்டு வாரியம் (CPCB) இந்தியாவில் உள்ள மிகவும் மோசமடைந்த ஆறுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அடையாறு, அமராவதி, பவானி, காவேரி, கூவம், பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, வசிஷ்ட நதி மற்றும் திருமணிமுத்தாறு உள்ளிட்ட ஆறுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அதிகபட்சமாக லிட்டருக்கு 345 mg அளவுடன் சென்னை கூவம் ஆறு (Cooum River) நாட்டிலேயே அதிக மாசடைந்த ஆறாக முதல் இடத்தில் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை வேகமாக மாசடைந்து வரும் ஆறுகளில் கூவத்திற்கு பிறகு தாமிரபரணி ஆறு உள்ளது. ஆற்றங்கரையோரம் இருந்த 80% ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் மற்றும் சேத்பேட்டையில் உள்ள லாங்ஸ் கார்டனில் மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுப்பதில் தற்போது அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.