திருமண தகராறுகள் வழக்குகளில் உடனடி கைது நடவடிக்கை எடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்

Siva

புதன், 23 ஜூலை 2025 (08:11 IST)
திருமணத் தகராறு தொடர்பான வழக்குகளில் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், தீர விசாரித்த பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
 
டெல்லியில் நடந்த ஒரு வழக்கில், ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமனார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகளில், கணவர் 109 நாட்களும், மாமனார் 103 நாட்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், பின்னர் அது பொய் புகார் எனத் தெரியவந்தது.
 
சிறையில் இருவரும் அனுபவித்த துன்பத்தை எந்த வகையிலும் ஈடு செய்யவோ அல்லது இழப்பீடு வழங்கவோ முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், அந்த பெண், தனது கணவர் மற்றும் மாமனாரிடம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்த சம்பவத்தின் அடிப்படையில், இனி திருமண தகராறு குறித்த வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சில முக்கிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது:
 
உடனடி கைதுக்குத் தடை: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது.
 
இரண்டு மாத கால அவகாசம்: FIR பதிவு செய்யப்பட்ட இரண்டு மாத காலத்திற்குள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது ஒரு "கூலிங் ஆஃப்" காலமாக கருதப்படும்.
 
குடும்ப நலக் குழுவின் பங்களிப்பு: இந்த இரண்டு மாத கால அவகாசத்தில், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவை மாவட்டத்தின் குடும்ப நலக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 
குடும்ப நல நீதிமன்றங்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குடும்ப நல நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
 
இந்த வழிகாட்டுதல்கள், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கும் புகார்தாரர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்