சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் சாத்தனூர் அணையில் இருந்து திடீரென ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் தண்ணீரை திறந்து விட்டனர் என்றும், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தென்பெண்ணை ஆற்றில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தான் விழுப்புரம் கடலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுவதற்கு முன்னால் மக்களுக்கு எச்சரிக்கை முறையாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று இருப்பார்கள் என்றும் அரசின் அலட்சியம் காரணமாகத்தான் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், போர்க்கால அடிப்படையில் வெள்ள நீர் வடிவதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.