மத்திய பிரதேச மாநிலம் சிங்கரௌலி மாவட்டத்தில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த தினத்தில், கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்ய முயன்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில், கர்ப்பிணியின் உடல்நிலை மோசமடைந்ததால், வேறு வழியின்றி வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
குழந்தைகள் சரியான எடையுடன் பிறந்தபோதிலும், சரியான மருத்துவ வசதி இல்லாததால் இரண்டு குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக பிரசவம் பார்த்தவர்கள் எச்சரித்தனர். அதன்பின் தாய் மற்றும் 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்தது.
சாலை வசதி சரியாக இல்லாததாலேயே ஆம்புலன்ஸ் வர மறுத்துவிட்டதாகவும், இதனாலேயே கர்ப்பிணி பெண்ணின் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கர்ப்பிணி பெண் வசிக்கும் வீடு அமைந்துள்ள தொகுதி, பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.