தமிழக காங்கிரஸ் பலவீனமாக உள்ளது: கார்த்திக் சிதம்பரம் கூறியது ஏன் தெரியுமா?

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (17:58 IST)
கர்நாடக காங்கிரஸை ஒப்பிடும்போது தமிழக காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகனும், சிவகெங்கை தொகுதி மக்களவை எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை திகார் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார். அதேபோல் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகர் டிகே சிவகுமார் என்பவர் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த இரண்டு காங்கிரஸ் பிரமுகர்களின் கைது நடவடிக்கையால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கர்நாடக மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் எந்த விதமான எதிர்ப்பையும் தமிழக காங்கிரசார் தெரிவிக்கவில்லை. ஆங்காங்கே ஒரு சில போராட்டங்கள் நடந்தாலும் அந்த போராட்டங்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை
 
 
திமுக போன்ற கூட்டணி கட்சிகளும் ப.சிதம்பரம் கைதுக்கு பெயரளவில் கண்டனம் தெரிவித்தார்களே தவிர தீவிரமான போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மனதில் வைத்து இன்று பேட்டி ஒன்றில் கூறிய கார்த்தி சிதம்பரம் ’கர்நாடக மாநிலத்தோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பலம் இல்லை என்று தெரிவித்து உள்ளார். தனது தந்தையின் கைதுக்கு சரியான அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற அதிருப்தியே இந்த கருத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்