தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் விஜயதாரணி?

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (00:47 IST)
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்ததையடுத்து நீண்ட நாட்களாக அடுத்த தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது.


 
 
இந்நிலையில் புதிய தலைவராக பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த தலைவர் ஒரு பெண்ணாக இருக்கலாம், அது விஜயதாரணியாக கூட இருக்கலாம் என செய்திகள் உலா வருகின்றன.
 
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் பேசிய விஜயதாரணி இந்தியாவின் கடல் பகுதிகளை பா.ஜ.க முழுமையாக இணைக்காததால் பாதுகாப்பானதாக இல்லை என கூறினார்.
 
இணையத்தில் அமைய இருக்கும் துறைமுக திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை எனவும், இந்த திட்டத்தால் மீனவ கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படாதவாறு மறுசீரமைப்பு செய்து கொடுக்கப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவரை எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விரைவில் அறிவிப்பார்கள். இதற்காக 9 பேரிடம் கட்சியின் தலைமை நேர்காணல் நடத்தியுள்ளது. ஒரு பெண் அல்லது வேற யாராவது புதிய தலைவராக நியமிக்க வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார். இந்த பேட்டியின் மூலம் அவரே புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்