அதிமுகவின் 6 சிலிண்டர் இலவச விளம்பரம் - நிஜத்தில் ஒத்துவருமா?

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (15:35 IST)
அதிமுக 6 சிலிண்டர் இலவசம் என்ற விளம்பரம் சிலிண்டர் விலை உயர்வின் கோவத்தை மக்களிடையே பிரதிபலிக்கும் என்பதை அறியாமல் விளம்பரப்படுத்தி வருகின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டி.

 
மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் மர்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ராம கிருஷ்ணன்  மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் ஆகியோர் பங்கேற்றனர்.
 
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது; தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு உறுதி என்பது பொதுமக்களை சந்திக்கும் போது தெரிகிறது.
 
இந்த நிலையில் அதிமுக, பாஜக கூட்டணியில் வாக்களார்களுக்கு பணம் விநியோகம் தாராளமாக நடைபெற்று வருகிறது, குறிப்பாக அதிகாரிகள் உதவியுடன் நடைபெற்று வருவதாக செய்திகள் கிடைக்கபெற்று வருகிறது.
 
பாஜக மீது பொதுமக்கள் மத்தியில்  வெறுப்புணர்வு அதிகரித்து உள்ளது, குறிப்பாக பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வும், கூடுதலாக ரயில் நிலையங்களில் நடைபாதை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.
 
இந்து அறநிலையத்துறை கீழ் செயல்பட்டு வருகின்ற கோவில்களை பாஜக தேர்தல் அறிக்கையில், ஆன்றோர் சான்றோர் கையில் ஒப்படைக்கப்படும் என்று வைப்பதற்கு இதில் அதற்கான வரையறை என்ன என்பது சர்ச்சைக்குரியது.
 
பழங்காலத்து, ஆபரணங்கள் வரலாற்றுச் சான்றுகள் கோயில்களில் இருக்கின்றது அதனை தனியாருக்கு வழங்குவதை போன்ற நடவடிக்கையாகவே தெரிகிறது. இத்தகையது மக்களின் வழிபாட்டு உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
 
மேலும் மோடி அரசாங்கம் தனியார் மயத்தை ஊக்குவித்து வருகிறார். 11 விமான நிலையங்களை கடந்த 10 நாட்களில் விற்பனைக்கு தயாராகி வருகிறது. மதசார்பற்ற கூட்டணி இவற்றை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கான ஆட்சியை வழங்கும்.
 
அதிமுக தற்போது 6 சிலிண்டர் இலவசம் என்ற விளம்பரம் சிலிண்டர் விலை உயர்வின் கோவத்தை மக்களிடையே பிரதிபலிக்கும் என்பதை அறியாமல் விளம்பரப்படுத்தி வருகின்றனர். பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்க  துணை முதலமைச்சரான ஓபிஎஸ் -ன்  சொந்த தொகுதியில் செல்ல முடியாத நிலையை பணத்தை வழங்கி சரி செய்து விடலாம் என்று நினைப்பது தவறு.
 
மேலும் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும்  ஒப்புகைச்சீட்டு இயந்திரம்  ஒரே  நேரத்தில் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது .
 
தபால் வாக்குகள் நடைமுறை என்பது அரசு ஊழியர்களுக்கு என்கிறபோது, தற்போது மாற்றுதிறனாளிகள், முதியவர்களுக்கு தபால் வாக்கு முறைகேடுகள் நடைபெற வழி வகுக்கும். தற்போது கட்டாயத்தின் பேரில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தபால் வாக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும், குற்றச்சாட்டும் எழுந்துள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்