கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலி ஆன்லைன் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு 34 லட்ச ரூபாய் இழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் இடையர்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த 32 வயது மோனிஷா என்பவர் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது குறித்து ஆன்லைனில் தேடி தகவல்களை சேகரித்தார். அப்போது அவரது WhatsApp எண்ணை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்களுடைய செயலியை டவுன்லோடு செய்யுமாறு அனுப்பினர்.
இந்த செயலி மூலம் பங்குச்சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டால் நல்ல லாபம் கிடைக்கலாம் என்றும் ஆசை வார்த்தை காட்டப்பட்டது. முன்னணி நிறுவனங்களையும் பங்குகளை வாங்குவது, விற்பது உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து அதில் முதலீடு செய்யும் படி அறிவுறுத்தினர்.
அதை நம்பிய மோனிஷா, அந்த கணக்குகளுக்கு தங்களுடைய சேமிப்பான 34 லட்ச ரூபாயை அனுப்பினார். அந்த பணம் மோசடி நபர்களின் செயலியில் வரவு வைக்கப்பட்டு, வர்த்தகமும் செய்யப்பட்டு, லாபம் வருவது போல் காட்டியது. ஒரு கட்டத்தில் 50 லட்சத்திற்கு மேல் செயலியில் இருப்பு இருந்ததாக காண்பிக்கப்பட்டது.
அந்த பணத்தை மோனிஷா எடுக்க முயன்றார், ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியாது என்று தெரிந்த பின்பு தான் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கோவை காவல்துறையில் புகார் அளித்த நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.