ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி மசூதி கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய மக்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் யாரெல்லாம் அந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதத்தில் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். வெளி மாநிலங்கள், வெளிநாட்டிலிருந்தும் மக்கள் பலர் வருகை புரிந்திருந்ததால், சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”தேவைப்பட்டால் ஈஷா சிவராத்திரி பூஜைகளில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார். சில திரைப்பிரபலங்களும் ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.