சென்னையில் ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும், அவரை காவல்துறையினர் கைது செய்து இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் இது குறித்து விசாரித்தனர். அப்போது, தன்னுடைய பள்ளியில் தமிழ் ஆசிரியர் சுதாகர் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவன் தெரிவித்ததை அறிந்து, பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து, மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், பெற்றோர் புகாரின் அடிப்படையில் தமிழ் ஆசிரியர் சுதாகர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போக்சோ உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.