சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் இரவு நேரத்தில் காவலர்களிடம் அவதூறாக பேசிய சந்திரமோகன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள் அங்கு நின்ற வாகனத்தை எடுக்குமாறு கூறிய போது, பதிலுக்கு சந்திரமோகன் மற்றும் அவருடன் இருந்த தனலட்சுமி இருவரும் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் சந்திரமோகன், தனலட்சுமி ஆகிய இருவரும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கில் சிக்கினர்.
அதன்பின் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கோரிய மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் மனு விசாரணையில் காவல்துறை தரப்பில், பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இருவரும் நடந்து கொண்டதாக கூறி, ஜாமீன் வழங்கக் கூடாது என வலியுறுத்தியது.
ஆனால், "இந்த குற்றத்திற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்க போகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சந்திரமோகனுக்கு தினமும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.