போலிஸாரின் சங்க கனவை கலைத்த உயர்நீதிமன்றம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (16:23 IST)
காவல்துறையினர் சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
 

 
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற காவலர் கடந்த 2007ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
 
அதில், ”தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் உரிமைகளை பெற கடந்த 2001ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை காவலர் நலச் சங்கம் உருவாக்கப்பட்டது. காவலர்கள் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழக உள்துறை செயலாளர், டிஜிபிக்கு மனு கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
எனவே உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை டிஜிபி பரிசீலித்து, ஒரு மாதத்தில் முடிவெடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. ஆனால் டிஜிபி இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. எனவே உடனடியாக எங்களின் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று புதனன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில், “தமிழக காவல்துறை காவலர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு வீட்டுவசதி வாரியம், ரேஷனில் உணவுப் பொருட்கள், போக்குவரத்து மற்றும் உணவுப்படிகள், இலவச செல்போன் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
 
மற்ற அரசு ஊழியர் சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போல காவல்துறையினர் சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்க முடியாது. ஏற்கெனவே இதுதொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக காவல்துறையினர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க முடியாது” என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எம். ஜெயச்சந்திரன், தமிழ்நாடு காவல்துறை காவலர் நல சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்தார்.
அடுத்த கட்டுரையில்