நாடு முழுவதும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எதிர்வரும் ஆகஸ்டு 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விநாயகர் சிலை விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.
சென்னையிலும் விநாயகர் சதுர்த்தி பிரபலமாக கொண்டாடப்படும் நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரப்பிசின் போன்றவற்றை பயன்படுத்தால். தெர்மகோல் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட அலங்காரங்களை பயன்படுத்தக் கூடாது. சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோல சிலைகளை சென்னையில் காசிமேடு, பட்டினபாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.