சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தீட்சித், பள்ளி வளாகத்திலேயே பள்ளி வேன் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி வாகனங்களில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனங்களில் கண்டிப்பாக உதவியாளர்கள் இருக்க வேண்டும். வாகனத்தில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றக் கூடாது. பள்ளி வாகனங்களில் பாடல்கள் ஒலிக்க செய்ய கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.