வேலை நிறுத்தத்தால் மெட்ரோவுக்கு ஜாக்பாட்: 2.1 லட்சம் பேர் பயணம்!

செவ்வாய், 29 மார்ச் 2022 (10:31 IST)
பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் வழக்கத்தை விட இரு மடங்கு மெட்ரோவில் பயணம் செய்துள்ளார்கள் என தகவல். 

 
மத்திய அரசை கண்டித்து இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் நேற்றும், இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் 11 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் நேற்று தமிழகம் முழுவதும் 30 சதவீதம் பேருந்துகளே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாமல் கடும் சிரமங்களை சந்தித்தனர்.
 
நேற்று தமிழகம் முழுவதும் 32% பேருந்துகளே இயங்கி வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்தது. சென்னையில் உள்ளூர், புறநகர் பேருந்து சேவைகள் குறைந்ததால் மக்கள் மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் பயணிக்க தொடங்கினர். இதனால் சென்னை புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோவில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
 
இந்நிலையில் பொது வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் வழக்கத்தை விட இரு மடங்கு மெட்ரோவில் பயணம் செய்துள்ளார்கள். பேருந்துகள் சரிவர இயங்காததால் சென்னை மெட்ரோ ரயில்களில் நேற்று 2.1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
இதனிடையே இன்று தமிழகம் முழுவதும் 90% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் 92% பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளில் 68 % பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்