கொரோனா சிகிச்சைக்கு லட்சக் கணக்கில் வசூல்! – தனியார் மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை!

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (11:01 IST)
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக லட்சக் கணக்கில் பணம் வசூல் செய்த தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்தது. அதன்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விவரத்தையும் மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

ஆனால் பல தனியார் மருத்துவமனைகள் அரசு அறிவுறுத்தல்களை மீறி அதிகமான தொகையை வசூல் செய்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பல தனியார் மருத்துவமனைகளிலும் அடிக்கடி சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சோதனை மேற்கொண்டபோது நோயாளி ஒருவருக்கு 19 நாட்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் ரூ.12 லட்சம் வசூலித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள் கொரோனா சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர். இதுபோல அதிக தொகை வசூல் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்