கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்றும், இந்த வீடியோ வெளியிட்டவர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்
இந்த வீடியோவில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுனரை இன்று மாலை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கோடநாடு வீடியோ சம்மந்தமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லாததால் தான் சிபிஐ விசாரிக்க வேண்டுமென மனு அளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.