முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது மீது திமுகவினர் வேண்டுமென்றே பொய் வழக்குகள் போடுவதாகவும், தன்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது என்றும் பேட்டியளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "சிவகாசி எனது சொந்த மண். என்னை சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் ஆக்கியது இந்த மண்தான். எனவே, நான் வேறு தொகுதியில் போட்டியிட மாட்டேன். வரும் தேர்தலில் சிவகாசியில் தான் போட்டியிடுவேன்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் எடப்பாடி பழனிசாமியின் பிரகாசமான முகமாக இருப்பதால், என்னை குறிவைக்கின்றனர். திமுக ஆட்சியில் என் மீது குறி வைத்து பல வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் ஒன்றை சொல்கிறேன்: என்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
வரும் தேர்தலில் தன்னை எதிர்த்து யார் நின்றாலும், மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்றும் அவர் உருக்கமாகப் பேசினார். ராஜேந்திர பாலாஜியின் இந்த அதிரடி பேச்சு, தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.