திருப்பூரில் பனியன் கம்பெனி தொழிலதிபர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
சனி, 4 ஜூன் 2016 (09:37 IST)
திருப்பூர் அருகே பல கோடி ரூபாய் கடன் சுமை அதிகரித்த நிலையில் விரக்தி அடைந்த பனியன் கம்பெனி உரிமையாளர் தனது இரு குழந்தைகளைக் கொன்று மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
 

 
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (40). இவரது மனைவி பிரபாவதி (35). மகன்கள் தனுஷ் (14), அனுஷ்(8). பனியன் கம்பெனி நடத்தி வந்த தாமரைக்கண்ணன், பல்லடம் வட்டம் கணபதிபாளையம் ஊராட்சி திருமலைநகரில் புதிதாக பனியன் கம்பெனியுடன் வீடு கட்டி அதன் மேல் தளத்தில் குடியிருந்து வந்தார்.
 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பொங்கலூரில் வசித்து வரும் தாமரைக்கண்ணனின் தந்தைக்கு சென்னையில் இருந்து அவரது இளைய மகன் தொடர்பு கொண்டுள்ளார். அண்ணனை தொடர்ச்சியாக அலைபேசியில் அழைத்தபோதும் தொடர்பு கொள்ளவில்லை. எனவே நீங்கள் அழைத்துப் பாருங்கள் எனக் கூறியுள்ளார்.
 
இதையடுத்து தந்தையும் கண்ணனை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். அப்போதும் யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர் திருமலை நகருக்கு விரைந்து வந்திருக்கிறார்.
 
முன்புற கண்ணாடிக் கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அறையில் கணவன், மனைவி இருவரும் தூக்கில் பிணமாகத் தொங்கினர். உள்ளே இருக்கும் தனித்தனி அறைகளில் குழந்தைகள் தனுஷ், அனுஷ் தூக்கில் பிணமாகத் தொங்கினர்.
 
இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்லடம் காவல் நிலையத்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வந்து ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனர். நால்வரது சடலங்களையும் கைப்பற்றி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
 
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், தாமரைக்கண்ணன் தம்பதியினர் முதலில் தங்கள் பிள்ளைகளைத் தனித்தனி அறையில், சப்தமிடாமல் இருக்க வாயில் பிளாஸ்டிக் டேப்பை வைத்து அடைத்து கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததாகத் தெரிகிறது.
 
அதன் பிறகு தம்பதியர் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளனர். வியாழக்கிழமை நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
 
காரணம் என்ன?
 
தாமரைக்கண்ணனுக்கு ஏற்கனவே ரூ.3 கோடி அளவுக்கு கடன் இருந்துள்ளது. இந்நிலையில் கணபதிபாளையத்தில் உள்ள பேங்க் ஆப்இந்தியா வங்கிக் கிளையில் ரூ.3.50 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். இவர் கொடுத்த விண்ணப்பத்தில் வேறொருவரின் தொழிலகப் பதிவு எண் (டின் நம்பர்) கொடுத்து இருந்திருக்கிறார்.
 
இது குறித்து திருப்பூர் ஹார்விநகர் மிஷின் வியாபாரி சுப்பிரமணியம் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் மாநகரக் குற்றப் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமரைக்கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது பற்றி பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடன் இருப்பதுடன், புதிய கடனுக்கு முயற்சி செய்ததிலும் மோசடி நடைபெற்றதால் அவமானம் தாங்காமலும், விரக்தி அடைந்தும் தாமரைக்கண்ணன் இந்த தவறான முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
 
 
அடுத்த கட்டுரையில்