தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணமடைந்த பின்னரும் தற்போது வரை பாஜக அதிமுகவில் ஆதிக்கம் செலுத்துவதாக அரசல் புரசலாக பேசப்பட்டுவந்தது.
ஜெயலலிதாவின் பொறுப்புகள் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது முதல் தற்போது அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரை பாஜகவின் பங்கு பெருமளவில் இருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்கும் படி அதிமுகவினர் கூறிவருகின்றனர். கட்சி உடையாமல் இருக்க அனைவரும் ஒரே அணியில் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் இதிலும் பாஜக புகுந்து கட்சியை உடைக்கும் வேலையில் இரங்கி இருப்பதாக அதிமுக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
வட சென்னையில் நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், 1987-இல் எம்ஜிஆர் இறந்தபோது அதிமுகவுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா அதிமுகவை மீட்டெடுத்தார். தற்போது வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் இருந்து சின்னம்மாவை ஆதரிக்க வேண்டும். சிலர் பதவி வெறியோடு உள்ளார்கள். ஆனால் சின்னம்மாவுக்கு அந்த ஆசை இல்லை.
நான்தான் முதலில் அவர்களை பொதுச்செயலாளராக பதவி ஏற்கும்படி கேட்டுக்கொண்டேன். சசிகலாவை எதிர்ப்பவர்கள் உண்மையான அதிமுகவினராக இருக்க முடியாது. மத்திய பாஜக அதிமுகவை உடைக்க நினைக்கிறது. எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் மதுசூதனன்.