பாஜகவுடன் கூட்டணி அமைக்க சில கட்சிகள் தவம் இருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில் அவர் அதிமுகவை குறிப்பாக குறிப்பிடவில்லை என எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், "கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்" என்று அதிமுகவை சொல்லவில்லை என்பது உண்மைதான் என அண்ணாமலையும் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டியில், "நான் சொன்ன பேட்டியில் அதிமுக என்ற பெயரை எங்கும் கூறவில்லை. பாஜகவைப் பற்றி நான் தெளிவாக பேசுகிறேன். எடப்பாடி பழனிசாமியும் தெளிவாக பேசுகிறார்" என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து, "அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பாஜகவைப் திட்டுவது ஏன்? உள்நோக்கம் கொண்டவர்களே இந்த பிரச்சனையை கிளப்பி வருகிறார்கள். அரசியல் விமர்சனங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது அவர்களது குறிக்கோள். எந்த கூட்டணி அமைய வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கிறார்கள். அப்படி என்றால், நானும் எடப்பாடியாரும் எதற்கு?" என்று கேட்டார்.
எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்யாததை அடுத்து, இரு கட்சிகளும் கூட்டணிக்கு நெருங்கி வருகின்றன என்று கூறப்பட்டு வருகிறது.