இளைஞர்களிடையே சமீப காலங்களில் பைக் மோகம் மிகுதியாக உள்ளது. முக்கியமாக 18 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் பலர் ரேஸிங் ரக அதிவேக பைக்குகளை வாங்கி கேட்டு அடம்பிடிப்பதும், சிலர் தற்கொலை செய்து கொள்வதும் அன்றாட செய்திகளாகிறது. சில பெற்றோர் அப்படியாக பைக்குகளை வாங்கி கொடுப்பதால் அவர்கள் அதிவேகமாக சென்று விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் தற்போது சென்னையில் நடந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் 18 வயதான அப்துல் சாஜித் என்ற சிறுவன் தனது பெற்றோரிடம் அடம்பிடித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் புதிதாக பைக் ஒன்றை வாங்கியுள்ளார். நேற்று அந்த பைக்கில் திருவொற்றியூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற அவர் கட்டுப்பாட்டை இழந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கும் முன்னால் இதுபோன்ற ஒரு பைக் விபத்தில் அப்துல் சாஜித் சிக்கியுள்ளார். அதில் பலத்த அடிப்பட்டு கோமா நிலைக்கு சென்றவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் குணமாகியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய பைக்கை வாங்கி அவர் விபத்தில் மரணமடைந்த சம்பவம் அவரது பெற்றோரையும், சுற்றத்தாரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.