தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (10:39 IST)
நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழகத்துக்கு புதிய முழுநேர ஆளுநரை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் தற்போது தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.



கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து ரோசைய்யா விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த வித்தியாசாகர் ராவை தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமித்தார்கள்.
 
ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாகவும் தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தார். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு மறைவிற்கு பின்னர் அரசியல் சூழலில் பரபரப்பாகவே செல்கிறது. இதில் ஆளுநரின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இதனால் தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு ஒரு வருட காலமாக ஒரு முழு நேர ஆளுநர் நியமிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தனர்.
 
இந்நிலையில் தற்போது முக்கியமன அரசியல் சூழ்நிலையில் புதிய முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டுள்ளார். பான்வாரிலால் தனது அரசியல் வாழ்க்கையை பார்வர்ட் பிளாக் கட்சியில் ஆரம்பித்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் இருண்டு முறை எம்பியாக இருந்துள்ளார்.
 
அதன் பின்னர் பாஜகவில் இணைந்த பன்வாரிலால் புரோஹித் ஒரு முறை எம்பியாக இருந்தார். இடைப்பட்ட காலத்தில் இவர் தனியாக கட்சியையும் நடத்தியிருக்கிறார். பன்வாரிலால் புரோஹித் மூத்த பழுத்த அரசியல்வாதியாக இருந்தவர். இவர் பாஜகவுக்கு விசுவாசமாகவும் நெருக்கமாகவும் இருப்பவர் என கூறப்படுகிறது.
 
பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் விரைவில் தனது பொறுப்புகளை புதிய முழு நேர ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஒப்படைப்பார் என கூறப்படுகிறது. மேலும் பன்வாரிலால் புரோஹித்தும் விரைவில் தமிழக ஆளுநராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்