பிளாஸ்டிக் தடை எதிரொலி: வாழை இலைக்கு கிராக்கி

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (06:48 IST)
தமிழகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி முதல் சில குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் பிளாஸ்டிக் இல்லா பொருட்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக ஓட்டல் நடத்துபவர்கள் இதுவரை பிளாஸ்டிக் பேப்பர் மூலம் பார்சல் கட்டி கொடுத்து கொண்டிருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஓட்டல்களிலும் வாழை இலையில் கட்டிக்கொடுக்க தொடங்கிவிட்டனர். இதனையடுத்து வாழை இலைக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே அதிகளவில் வாழையிலை உற்பத்தி செய்யப்படுவது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தான். இங்கு வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது என்பதும்  சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் அளவில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வாழை இலைக்காக வியாபாரிகள் இந்த  கிராம பகுதிக்கு சென்று விவசாயிகளிடம் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு வாழை இலை தரவேண்டும் என்று விலைபேசி ஒப்பந்தம் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் மகி​ழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல் மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், பேப்பர் பொருட்கள், மஞ்சள் துணிப்பை ஆகியவைகளின் வியாபாரமும் ஜரூராக நடந்து வருகிறது. தமிழக அரசின் ஒரே ஒரு உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்