ஜெயலலிதா சமாதிக்கு செல்ல தடை கோரும் சீமான்!

Webdunia
திங்கள், 22 மே 2017 (11:57 IST)
இலங்கை இறுதிப்போரின் போது தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் மே 17 இயக்கத்தினர் அஞ்சலி செலுத்த முயற்சித்தனர். இதற்கு அனுமதி அளிக்காத காவல்துறை அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமையின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கண்டித்துள்ளார்.


 
 
முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17-ஆம் தேதி உயிர் நீத்த தமிழர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படும். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அஞ்சலி செலுத்த மே 17 இயக்கம் அழைப்பு விடுத்தது.
 
ஆனால் காவல்துறை இதற்கு அனுமதி வழங்கவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டும், அதனை மீறி மே 17 இயக்கத்தினர் ஏராளமானோர் வெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
 
இதனையடுத்து மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரை கைது செய்த காவல்துறை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் வரும் 29-ஆம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இவர்களது ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 23-ஆம் தேதி வருகிறது.
 
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு தடைவிதித்தது ஏன்? மெரீனாவுக்கு கூட்டமாக போகக் கூடாது என்றால் ஜெயலலிதா சமாதியில் மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்வதால் மட்டும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்காதா?
 
மெரீனாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின் சமாதிக்கு யாரும் கூட்டமாக போகக் கூடாது என்று தடை போட தமிழக அரசு தயாரா? என்றார்.
அடுத்த கட்டுரையில்