பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் சத்யாவுக்கு உடந்தையாகவும், தரகராகவும் செயல்பட்ட தமிழ்செல்வியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். இவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்துக்கு பெண் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்போன் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா (30) என்பவர் மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமாகி உள்ளார்.
செயலியைத் தொடர்ந்து வாட்ஸ் அப் மூலமும் இருவரும் பேசி வந்துள்ளனர். அப்போது, தனது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சத்யா தெரிவித்ததுடன், தமிழ்ச்செல்வியையும் மகேஷ் உடன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இருவரும் பழகி வந்த நிலையில், மகேஷ் அரவிந்த் தனது வீட்டுக்குத் தெரியாமல் சத்யாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில் மகேஷ் அரவிந்த், சத்யாவுடன் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.
குடும்ப அட்டையில் சந்தியாவின் பெயரை இணைக்க முயன்றபோது சத்யா ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து சந்தியா தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக மகேஷ் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து போலீசார் நடத்தி விசாரணையில், சத்யா காவல்துறை அதிகாரி முதல் தொழிலதிபர்கள் வரை என 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளை அபகரித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, புதுச்சேரியில் பதுங்கியிருந்த சத்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சத்யாவின் இந்த திருமண மோசடிகளுக்கு உடந்தையாகவும், தரகராகவும் செயல்பட்ட தமிழ்செல்வி என்ற பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தமிழ்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மகேஷ் அரவிந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ்குமார், இதுவரை 53 பேரை திருமணம் செய்துள்ள சத்யாவுக்கு, அவரது தோழியான தமிழ்செல்விதான் உடந்தையாகவும், தரகராகவும் செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். எனவே, திட்டமிட்டு பலரை ஏமாற்ற உதவிய தமிழ்செல்விக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது இன்று வாதாடினார்.