சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் பணிபுரியும் பாலாஜி என்ற மருத்துவரை கத்தியால் குத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய விக்னேஷ் என்பவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக உள்ள பாலாஜி, கடந்த 13ஆம் தேதி விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, விக்னேஷ் கைது செய்யப்பட்டு, அவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி, விக்னேஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, காவல்துறை தரப்பில், “மக்கள் அதிகம் நடமாடும் மருத்துவமனையில் ஆயுதம் எடுத்து வந்து, மருத்துவரை தாக்கியுள்ளார். மேலும், விசாரணை நடைபெற்று வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவல்துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.