முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சையாக சீமான் பேசியதை தொடர்ந்து அவர் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இந்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளித்த சீமான், ”இது போல் நான் பல வழக்குகளை சந்தித்துள்ளேன், எனக்கு இது ஒன்றுமே இல்லை” என கூறினார். மேலும் “காங்கிரஸார் எந்த பிரச்சனைக்கு போராடியுள்ளனர்? இதற்காகவாவது போராடுவது மகிழ்ச்சி, பிரபாகரனை முன்வைத்து தான் எனது அரசியல் பரப்புரைகள் இருக்கும்” எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிங்கள ராணுவத்தை விட விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றது என கூறியுள்ளார். மேலும் ஜனநாயக வழியில் போராடினால் தான் வெற்றி கிடைக்கும் எனவும், ஆயுத போராட்டங்கள் நிலைக்காது எனவும் கூறியுள்ளார்.