ஆயுத பூஜை விடுமுறை தொடங்க விருக்கும் நிலையில் விடுமுறைக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்பவர்களுக்கு செங்கல்பட்டு காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்தஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் என்.எச்-32 (ஜி.எஸ்.டி. சாலை) புக்கத்துறை மற்றும் படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பால கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், தசரா மற்றும் ஆயுத பூஜை பண்டிகைக்கு (30.09.2025 முதல் 01.10.2025 வரை) தொடர் விடுமுறையில் செல்வோர் போக்குவரத்து நெரிசலைச் சந்திக்க நேரிடும்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும்போது தாமதங்களைத் தவிர்க்க ஈ.சி.ஆர்., ஜி.டபிள்யூ.டி. சாலைகள் வழியாகச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு மற்றும் சென்னையின் தென் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், படாளம் மற்றும் புக்கத்துறை மேம்பாலப் பணி நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்க, செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் - மேலவளம்பேட்டை வழியாக மீண்டும் ஜி.எஸ்.டி. சாலையை அடைந்து செல்லக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பைபாஸ் வழியாகத் திருமுக்கூடல் - நெல்வாய் கிராஸ் சாலை - உத்திரமேரூர் - வந்தவாசி - திண்டிவனம் வழியாகச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
சென்னையிலிருந்து மேற்கு செல்லும் மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் ஜி.டபிள்யூ.டி. சாலை வழியாகச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் 30.09.2025 பகல் 2 முதல் 01.10.2025 காலை 3 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.